உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

கோவில் நிலத்தை மீட்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-20 10:33 GMT   |   Update On 2022-01-20 10:33 GMT
வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள இடத்தில் கோவில் திருவிழா நடத்தப்பட்டு வந்தது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் செவந்தபாளையம் பகுதியில் வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றி உள்ள இடம் நத்தம் புறம்போக்கு என்பதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த இடம் கைப்பற்றப்பட்டு திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் கோவிலில் திருவிழா நடத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல் இருந்து வந்தது. இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள இடத்தில் கோவில் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. 

தற்பொழுது கோவில் வேலைகள் நடந்து வருவதால், சாமி சிலையை திருவிழா நடத்தும் இடத்தில் வைத்துள்ளனர். ஆனால் அந்த இடத்தில் தாசில்தார் குடியிருப்பு கட்டப்பட இருப்பதால் அங்கு இருந்த சிலையை எடுக்க தாசில்தார் தெரிவித்துள்ளார். 

ஆனால் கோவில் வேலையை முடித்துவிட்டு சிலையை எடுத்து கொள்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தாசில்தார் சாமி சிலை வைத்திருந்த குடிசையை இடித்து தள்ளியதாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News