உள்ளூர் செய்திகள்
வரத்து வாய்க்காலில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து நீர் செல்வதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது

வருசநாடு அருகே ஆக்கிரமிப்பால் நிரம்பாத குளங்கள்

Published On 2022-01-20 08:37 GMT   |   Update On 2022-01-20 08:37 GMT
வருசநாடு அருகே வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பால் குளங்கள் நிரம்பாமல் உள்ளது.
வருசநாடு:

வருசநாடு அருகே குமணன்தொழு சிறுஆற்றில் இருந்து பொன்னன்படுகை வழியாக அம்மாகுளம், கடமான்குளம் கங்கன் குளம், கோவிலாங்குளம், உள்ளிட்ட 4 குளங்களுக்கு வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல வரத்து வாய்க்காலை ஒட்டியவாறு விளை நிலங்களுக்கு செல்வதற்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்ட பின்பு அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் காரணமாக தற்போது வரத்து வாய்க்காலில் செடிகள் அதிக அளவில் வளர்ந்து நீர் செல்வதற்கு தடை ஏற்படுத்தி வருகிறது.

இந்த குளங்களை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது செடிகள் ஆக்கிரமிப்பு காரணமாக குளங்களில் முழுமையாக நீர் நிரம்பவில்லை.  கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குளங்களில் போதுமான அளவு நீர் தேங்காததால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல வரத்து வாய்க்கால் அருகே அமைந்துள்ள பாதையும் மரம், செடிகள் ஆக்கிரமிப்பில் காணப்படுகிறது. இதனால் இந்த பாதையை விவசாயிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வரத்து வாய்க்கால் மற்றும் அதன் அருகே செல்லும் பாதையில் மரம், செடிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News