உள்ளூர் செய்திகள்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

சமயபுரம் மாரியம்மனுக்கு ரெங்கநாதர் சீர்வரிசை

Published On 2022-01-19 09:40 GMT   |   Update On 2022-01-19 09:40 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு தைப்பூச விழாவையொட்டி கொள்ளிடக்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது.

திருச்சி:

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் தங்கை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கை. மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஸ்ரீரங்கம் கோவிலின் சார்புக் கோவிலாக இருந்துள்ளது.

இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி சமயபுரம் கோவிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரைக்கு நேற்று வருவார். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்பாள் தீர்த்தவாரி கண்டருளுவார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள்,  அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள்  புறப்பட்டனர்.

அவர்கள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறும் ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு எடுத்து வருவர்.

அங்கு சீர்வரிசைப் பொருட்களை சமயபுரம் மாரியம்மன்  கோவில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம் வழங்குவர். இந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு வரவில்லை.

இதையடுத்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தட்டுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர் பட்டர், அதிகாரிகள், அலுவலர்கள் சமயபுரம் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து சென்றனர்.

அங்கு சீர் வரிசை பொருட்களை மாரியம்மன் முன்னிலையில் கோவில் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம்  வழங்கினர்.
Tags:    

Similar News