உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கொரோனா விதிகளை மீறியதாக 21 லட்சம் அபராதம் வசூல்

Published On 2022-01-19 09:20 GMT   |   Update On 2022-01-19 09:20 GMT
திருச்சியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும், புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறை, உள்ளாட்சி அமைப்பினர், வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

திருச்சி மாநகரில் மாநகராட்சி தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தனித்தனியாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கூறும்போது, திருச்சி மாநகர எல்லைகளில் 8 சோதனைச்சாவடி 24 மணிநேரமும் செயல்பட்டு வருகின்றன.

மேலும் முக்கிய சாலை சந்திப்புகளான தலைமை தபால்நிலைய சிக்னல், மெகாஸ்டார் தியேட்டர் சந்திப்பு, எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி ஜனவரி 6&ந்தேதியில் இருந்து இதுவரை முகக்கவசம் அணியாத 9,734 பேருக்கு காவல்துறை சார்பில் அபராம் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமூக இடைவெளி மற்றும் இதர வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 10 தினங்களில் ரூ. 21 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஆலோசனை மற்றும் கட்டுப்பாடுகளை அனைத்து தரப்பினரும் கடைபிடித்து நோய் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களில் மாவட்ட காவல்துறை சார்பில் முகக்கவசம் அணியாத 1,010 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 2 லட்சத்து 38 ஆயிரம் தொகை வசூலிக்கப்பட்டது.  

பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற தவறியமைக்காக 13 பேருக்கு ரூ. 6500 அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கில் தேவையில்லாமல் ஊர் சுற்றிய 120 பேரிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் அபராத தொகையினை போலீசார் வசூலித்தனர்.

மேலும் 17 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News