உள்ளூர் செய்திகள்
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நகரத்தார் காவடி பழனி நோக்கி பாதயாத்திரையாக சென்ற காட்சி.

துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் வைர வேலை காணிக்கையாக பழனிக்கு கொண்டு சென்ற காரைக்குடி பக்தர்கள்

Published On 2022-01-15 11:11 GMT   |   Update On 2022-01-15 11:11 GMT
கொரோனா பரவல் காரணமாக 5 நாட்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் பல்வேறு ஊர்களில் இருந்து பழனி நோக்கி பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து வந்தவண்ணம் உள்ளனர்.
திண்டுக்கல்:

பழனி தைப்பூச திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டபோதிலும் காரைக்குடியை சேர்ந்த நகரத்தார் காவடி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைரவேலை காணிக்கையாக வைத்து வழிபட எடுத்து சென்றனர்.

பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 17-ந் தேதி திருக்கல்யாணமும், 18-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக 5 நாட்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் பல்வேறு ஊர்களில் இருந்து பழனி நோக்கி பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து வந்தவண்ணம் உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, தேவக்கோட்டை, கண்டனூர், புதுவயல், பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்து குன்றக்குடியில் குழுவாக பழனிக்கு பாதயாத்திரை வருவார்கள்.

அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்களது பாதயாத்திரை பயணத்தை காவடி சுமந்து தொடங்கினர். அப்போது வைரவேலை வைத்து பூஜை செய்து அதனையும் ஒரு பெட்டியில் வைத்து எடுத்து வருகின்றனர்.

இதற்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாரும் உடன் வருகின்றனர். சமுத்திராபட்டியில் தங்கி விட்டு இன்று அதிகாலை நத்தம் மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.

அங்குள்ள மடத்தில் காவடி மற்றும் வைர வேலை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வழியாக அவர்கள் பழனி நோக்கி தங்கள் பாதயாத்திரையை தொடர்ந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேரோட்டத்திற்கு முன்பாக பழனிக்கு வந்து விடும் இவர்கள் அங்குள்ள மடத்தில் தங்கி காவடி மற்றும் வைர வேலுக்கு சிறப்பு பூஜை செய்வார்கள். தைப்பூச தேரோட்டத்தில் கலந்து கொண்டு வைர வேலை முருகன் சன்னதியில் வைத்து வழிபாடு செய்வார்கள். அதன்பிறகு மீண்டும் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு வருவது நகரத்தார் காவடியின் சிறப்பு அம்சமாகும்.

இந்த வருடம் வருகிற 18-ந் தேதி வரை கோவில்கள் அடைக்கப்பட்டிருக்கும் என்பதால் நகரத்தார் காவடி முன்கூட்டியே பழனியை நோக்கி பாதயாத்திரையாக செல்கின்றனர்.

இதேபோல பல்வேறு ஊர்களில் இருந்தும் பழனி நோக்கி பாதயாத்திரை செல்கின்றனர். இவர்களுக்கு போலீசார் ஆங்காங்கே அறிவுரைகள் வழங்கி கொரோனா விதிகளை பின்பற்றிச் செல்லுமாறு எடுத்துரைத்து வருகின்றனர்.


Tags:    

Similar News