உள்ளூர் செய்திகள்
ராமேசுவரம் மேலகோபுர வாசல் பகுதி சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இல்லாததால் வெறிச்சோடி கிடக்கிறது.

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய ராமேசுவரம் சாலைகள்

Published On 2022-01-09 09:32 GMT   |   Update On 2022-01-09 09:32 GMT
முழு ஊரடங்கு காரணமாக ராமநாதபுரத்தில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை இன்றியும், மக்கள் நடமாட்டம் இன்றியும் காணப்பட்டது.
ராமநாதபுரம்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலை கள் வெறிச்சோடி காணப் பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தேவையில்லாமல் வீதிகளில் சுற்றித் திரிந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். சில இடங்களில் அபராதமும் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பட்டணம்காத்தான் செக் போஸ்ட், பாரதிநகர், குமரய்யா கோவில், கேணிக்கரை, அரண்மனை, அச்சுந்தன்வயல், பழைய பஸ் நிலையம், ஐ.ஓ.பி. சந்திப்பு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பொது  போக்குவரத்து முடக்கப்பட்டதால் பஸ்கள், ஆட்டோ, கார் எதுவும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதே நேரம்  ரெயில்கள் இயக்கப்பட்டதால் ராமநாதபுரத்திற்கு ரெயிலில் வந்த பயணிகளின் வசதிக்காக  ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. அதில் சென்றவர்கள் போலீசார் சோதனை செய்யும்போது ரெயில்வே டிக்கெட்டை காண்பித்தால், அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ராமேசுவரத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன அத்தியாவசிய தேவைகளுக்கான சில கடைகள் மட்டும் திறந்திருந்தது. எப்போதும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்களால் நிறைந்து காணப்படும் மேலக்கோபுர வாசல் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. பஸ் நிலையத்திலும் இதே நிலைதான் நீடித்தது.

தொண்டியில் வெளி மாநிலங்களுக்கு கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வணிக பகுதிகள்,  மீன் மார்க்கெட் இயங்கவில்லை.   அந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. 

வர்த்தகம் பாதிக்கப்பட்ட தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளானது. இதேபோல் சிதம்பரம், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வரும் வாகனங்கள், கேரள மாநிலம் செல்லும் வாகனங்கள் இயக்கப்படும்  கிழக்கு கடற்கரை சாலை இன்று வாகன நடமாட்டமின்றி காணப்பட்டது.
Tags:    

Similar News