உள்ளூர் செய்திகள்
ராஜேந்திர பாலாஜி

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு இல்லை

Published On 2022-01-08 04:27 GMT   |   Update On 2022-01-08 04:27 GMT
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.
திருச்சி:

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதைதொடர்ந்து விருதுநகர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜியை ஆஜர் செய்து மதுரை மத்திய ஜெயிலுக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே பாதுகாப்பு கருதி அவரை நேற்று முன்தினம் திருச்சிக்கு கொண்டு வந்து மத்திய ஜெயிலில் அடைத்தனர். இங்கு உயர் பாதுகாப்பு தொகுதி எண் 2-ல் அறை 4-ல் அடைக்கப்பட்டார். இந்த தொகுதியில் ஏற்கனவே சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் அடைக்கப்பட்டு இருந்தார்.

உயர் பாதுகாப்பு தொகுதி 2-ல் 6 அறைகள் உள்ளன. இதில் ராஜேந்திர பாலாஜியை தவிர்த்து வேறு கைதிகள் இல்லை. நேற்று 2-வது நாளாக வழக்கம்போல் சர்க்கரை, ரத்தகொதிப்பு, நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டார். ஜெயிலில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் ரிசல்ட் இன்று வந்தது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. இதனால் அவரை வேறு அறைக்கு மாற்றப்போவதில்லை. 20-ந்தேதி வரை உயர் பாதுகாப்பு தொகுதியிலேயே அடைக்கப்பட்டு இருப்பார் என ஜெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News