உள்ளூர் செய்திகள்
மின்சார ரெயில்

முழு ஊரடங்கில் புறநகர் மின்சார ரெயில் சேவை குறித்த விவரம்...

Published On 2022-01-07 07:18 GMT   |   Update On 2022-01-07 07:18 GMT
கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம்.
சென்னை:

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொது போக்குவரத்து அன்று நிறுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் அன்று முழுவதும் இயங்காது. வாடகை கார்கள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்காது. அதேபோல சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.

நீண்ட தூரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம்போல் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சேவையில் மாற்றம் இல்லை. பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் ரெயில் நிலையங்களுக்கு சென்று பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புறநகர் மின்சார ரெயில் சேவையை பொறுத்தவரை அத்தியாவசியமாக கருதப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக மின்சார ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை.

50 சதவீதம் மின்சார ரெயில்களை இயக்க சென்னை ரெயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-



கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் மின்சார ரெயில் சேவை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 4 வழித்தடங்களில் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. பொது ஊரடங்கையொட்டி 300 ரெயில்களை இயக்குவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

வழக்கம் போல அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரெயில் சேவை நடைபெறும். ரெயில்களில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்படவில்லை. டிக்கெட் வழங்குவதில் எந்த நடைமுறை மாற்றமும் செய்யப்படவில்லை.

கொரோனா முன்களப் பணியாளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடக்கூடிய அரசு, தனியார் ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அவசர பயணம் மேற்கொள்ளக்கூடியவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்யலாம்.

Tags:    

Similar News