உள்ளூர் செய்திகள்
சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை- 18 செமீ கொட்டித் தீர்த்தது

Published On 2021-12-30 14:15 GMT   |   Update On 2021-12-30 14:15 GMT
சென்னையில் இன்று மாலையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை:

தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. 

மாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை 6.30 மணி நிலவரப்படி எம்ஆர்சி நகர் பகுதியில் அதிகபட்சமாக 18 செமீ மழை பதிவாகியிருந்தது. நுங்கம்பாக்கம் - 12 செ.மீ., நந்தனம் - 12 செ.மீ., மீனம்பாக்கம் - 10 செ.மீ. மழை பெய்துள்ளது.



கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்வேறு கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடந்த மழையின்போது சேதமடைந்த சாலைகளில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில், இன்று பெய்த மழையால், அந்த பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியது. தொடர்ந்து மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இதேபோல் சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்தது. 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இன்று இரவும் இந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News