உள்ளூர் செய்திகள்
கைது

வானகரம் அருகே ரூ.5 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

Published On 2021-12-30 08:42 GMT   |   Update On 2021-12-30 08:42 GMT
வானகரம் அருகே ரூ.5 லட்சம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

சென்னை வானகரத்தில் உள்ள கட்டுமான பொருட்கள் மொத்த விற்பனை கடையில் வேலை பார்த்து வருபவர் தினேஷ் (27).

இவர் கடந்த 25-ந் தேதி உத்திரமேரூர் மற்றும் வந்தவாசி ஆகிய ஊர்களுக்கு சென்று அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் வசூலித்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் காசோலைகளுடன் இரவு 11 மணி அளவில் பஸ் மூலம் மதுரவாயல் வந்தார்.

பின்னர் நண்பர் விக்னேஷ்குமாருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து தினேஷிடம் இருந்த பணப்பையை பறித்து தப்பி சென்றனர்.

இது தொடர்பாக மதுரவாயல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதே நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுப்பிரமணியன் (42) மற்றும் அவரது நண்பர்களான கேரளாவை சேர்ந்த சதீஷ் (34) பழவந்தாங்கலை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் முத்தையா (29) உள்ளிட்ட 3 பேர் திட்டம் போட்டு வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கம் ரூ1.65 லட்சம் காசோலையை பறிமுதல் செய்தனர்.

சுப்பிரமணியன் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலையை விட்டு நின்றுவிட்டேன். தற்போது போரூரில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து என்னை அழைத்தனர். அப்போது உன் மூலம் சப்ளை செய்யப்பட்ட பொருட்களுக்கு ரூ.3 லட்சம் பணம் பாக்கி வரவேண்டி உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அந்த பணத்தை நீ கட்ட வேண்டும் என்று கூறியதோடு என்னை கட்டாயப்படுத்தி ஒரு பேப்பரில் எழுதியும் வாங்கிக் கொண்டனர்.

இதனால் வேறு வழி தெரியாமல் நண்பர்கள் சதீஷ், முத்தையா உதவியுடன் அதே நிறுவனத்தின் பணத்தை கொள்ளையடித்து ரூ.3 லட்சம் பணத்தை கட்டி விடலாம் என முடிவு செய்து திட்டமிட்டு வழிப்பறி செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News