உள்ளூர் செய்திகள்
தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரம்

Update: 2021-12-30 07:30 GMT
தி.மு.க.வின் ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களை பற்றிய விவரங்களை ‘ஆல்பம்’ போல் தொகுத்து வைத்து நேர்காணல் நடத்தியவர்களிடம் விளக்கி காண்பித்தனர். நேர்காணலில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சென்னை:

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஜனவரி 31-ந்தேதிக்குள் இந்த தேர்தலை நடத்துமாறு உச்சநீதிமன்றம் ‘கெடு’ விதித்துள்ளதால் பொங்கலையொட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தி.மு.க.வில் கடந்த மாதம் முதல் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வந்தன. இதில் ஒவ்வொரு வார்டுக்கும் குறைந்தது 10-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளனர். சென்னையில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்பமனு கொடுத்துள்ளார்.

இதில் ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதி வாரியாக மனுக்கள் சேகரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் எம். எல்.ஏ.க்கள் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளர்கள் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சென்னையில் முதன்முதலாக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. சென்னை வடக்கு மாவட்டம் உள்ளடக்கிய ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதிகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்த கட்சி நிர்வாகிகளை நேர்காணலுக்கு அழைத்து இருந்தனர்.

ராயபுரத்தில் உள்ள 6 பெண்கள் வார்டுகளுக்கும், ஆர்.கே.நகரில் உள்ள 4 பெண்கள் வார்டு, 3 ஆண்கள் வார்டுகளுக்கும், பெரம்பூரில் உள்ள 4 ஆண்கள் வார்டு, 3 பெண்கள் வார்டுகளுக்கும் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.

சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, கலாநிதி வீராசாமி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரிம் மூர்த்தி, ஆர்.டி.சேகர், எபினேசர், ஆகியோர் அமர்ந்து நேர்காணல் நடத்தினார்கள்.

விருப்ப மனு கொடுத்தவர்கள் மக்கள் பிரச்சினைக்காக என்னென்ன உதவி செய்துள்ளனர், கட்சியில் அவர்கள் வகித்துவரும் பதவி விவரங்கள், அரசியல் அனுபவங்கள், தேர்தலில் எவ்வளவு செலவு செய்ய முடியும்? போன்ற பல்வேறு விவரங்கள் நேர்காணலின் போது கேட்கப்பட்டன.

ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களை பற்றிய விவரங்களை ‘ஆல்பம்’ போல் தொகுத்து வைத்து நேர்காணல் நடத்தியவர்களிடம் விளக்கி காண்பித்தனர். நேர்காணலில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல் சென்னை வடகிழக்கு மாவட்டத்திலும் மாவட்ட பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம், எம்.எல்.ஏ. நாளை (31-ந்தேதி) நேர்காணல் நடத்துகிறார். மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்கள் செங்குன்றம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்த உள்ளார்.

மாதவரத்தில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் முதலில் திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளும், மதியம் 2 மணிக்கு மாதவரம் தொகுதி, செங்குன்றம் பேரூர் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளும் பங்கு பெறலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெறும் அளவுக்கு மாவட்ட செயலாளர்கள் வியூகம் வகுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசி இருந்தார்.அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஆனாலும் பல வார்டுகளில் யார்-யாருக்கு ‘சீட்’ கொடுப்பது என்று இப்போதே முடிவு செய்து வைத்துள்ளனர்.

கூட்டணி கட்சியினர் எந்தெந்த வார்டுகளை கேட்கிறார்கள் என்பதை பொறுத்து அதற்கேற்ப கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கட்சி பிரமுகர் தெரிவித்தார்.

மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைக்கும் பட்டியலை வைத்துக் கொண்டு ‘ஐபேக்’ டீம் தரும் ஆலோசனையின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் வெளியாகும் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கூட்டணி கட்சிகளை பொறுத்தவரை, காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும் அவர்கள் ஓரளவு திருப்தி படும் வகையில் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தி இருந்தார்.

அந்த வகையில் பெரிய அளவுக்கு 5 முதல் 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. ஆனாலும் இதுவரை கூட்டணி கட்சிகளை அழைத்து தி.மு.க. முறைப்படி இன்னும் பேச்சுவார்த்தை நடத்தாததால் அந்தந்த கட்சிகளில் பட்டியலை மட்டும் தயார் செய்துவைத்துள்ளனர்.

பேச்சுவார்த்தையின் போதுதான் எந்தெந்த வார்டுகளை தி.மு.க. கேட்கிறது. கூட்டணி கட்சிகள் எந்த வார்டுகளை கேட்டு பெறுவதில் முனைப்பு காட்டும் என்பது தெரிய வரும்.

Tags:    

Similar News