உள்ளூர் செய்திகள்
கைது

கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு அரசு பஸ்சில் போதை பொருள் கடத்திய லாரி டிரைவர் கைது

Published On 2021-12-28 05:01 GMT   |   Update On 2021-12-28 05:01 GMT
கர்நாடகாவில் இருந்து சேலத்திற்கு அரசு பஸ்சில் போதை பொருள் கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேட்டூர்:

தமிழகத்தில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் உள்ள குட்கா, பான் மசாலா மற்றும் வாயில் மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களை தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்ய தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. எதிர்கால சந்ததிகளை பாதுகாக்கும் வகையில், குட்கா, பான்மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 5-ந்தேதி சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி, எலத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ஜனநாயகன் (வயது 27) ஓட்டி வந்த மினிடெம்போவை சோதனை போட்டபோது, அதில் ரூ.13 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகியவை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல், பதுக்கல் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கர்நாடகாவில் இருந்து போதை பொருள் கடத்தி கொண்டு வந்த லாரி டிரைவரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். அதன் விபரம் வருமாறு:-

மேட்டூர் காவிரி பாலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 37). லாரி டிரைவர். இவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து பான்பராக் புகையிலை வாங்கி வந்து மேட்டூரில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பனை செய்வதாக மேட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்று இரவு மேட்டூர் போலீசார் மேட்டூர் பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர் கர்நாடக மாநில அரசு பஸ் மூலம் கர்நாடகத்திலிருந்து பான்பராக் புகையிலை கடத்தி வீட்டுக்கு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து ராஜாவிடம் இருந்த பான்பராக் புகையிலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News