உள்ளூர் செய்திகள்
கைது

பழனியில் வேல் சிலையை குடிபோதையில் உடைத்த வாலிபர் கைது

Published On 2021-12-16 04:31 GMT   |   Update On 2021-12-16 04:31 GMT
பழனியில் வேல் சிலையை குடிபோதையில் உடைத்த சேலம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பழனி:

பழனி பஸ்நிலையம் அருகே 2 இடங்களில் முருகப்பெருமானை நினைவு கூறும் வகையில் வேல் மற்றும் மயில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு பக்தர்கள் பலரும் தினமும் மாலைகள் அணிவித்தும் சூடம் ஏற்றியும் வழிபட்டுச் செல்வது வழக்கம்.

நேற்று இரவு குடிபோதையில் அரை நிர்வாணத்தில் வந்த ஒரு வாலிபர் ரவுண்டானாவில் ஏறி வேல் சிலைக்கு மேல் நின்று அதை சேதப்படுத்தினார். இதனால் வேல் சிலை 2 துண்டாக உடைந்து விழுந்தது.

இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பழனி அடிவாரம் போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனிடையே வேல் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் காட்டுத் தீ போல பரவியதால் ஏராளமானோர் அங்கு திரண்டு சிலையை உடைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. சத்தியராஜ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

போலீசார் விசாரணையில் சிலையை உடைத்த நபர் சேலத்தைச் சேர்ந்த முத்து மகன் முருகன் (வயது 24) என தெரிய வந்தது. இவர் டிரைவர் வேலை பார்த்து வந்துள்ளார். பழனிக்கு வந்த இவர் அதிக அளவு குடிபோதையில் தான் செய்வது என்ன என்று தெரியாமல் வேல் சிலையை சேதப்படுத்தியது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சேதமடைந்த சிலைக்கு பதிலாக வேறு வேல் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News