உள்ளூர் செய்திகள்
குன்னூர் அருகே வானில் ராணுவ ஹெலிகாப்டர் பறப்பதை படத்தில் காணலாம்.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கடைசி நிமிட வீடியோ வெளியானது

Published On 2021-12-09 05:26 GMT   |   Update On 2021-12-09 06:26 GMT
ஹெலிகாப்டர் வானத்தில் பறப்பதையும், பனிமூட்டத்திற்குள் சென்று மறைவதையும், சிறிது நேரத்தில் கீழே விழும் சத்தம் கேட்பதையும் சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர்.
கோவை:

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூரை நோக்கி சென்ற ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி அடுத்த நஞ்சப்ப சத்திரம் என்ற சிறிய கிராமத்தின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் குன்னூர் மலைரெயில் பாதையில் சுற்றுலா பயணி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வனத்தின் நடுவே நடந்து சென்று அங்குள்ள இயற்கை அழகினை கண்டு ரசித்து கொண்டிருந்தார்.

அப்போது வானத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டது. இங்கு எப்போதாவது தான் ஹெலிகாப்டர்கள் பறக்கும். இந்த சமயம் ஹெலிகாப்டர் எங்கிருந்து வருகிறது என யோசித்தனர்.

அப்போது வானில் பார்த்தபோது ஹெலிகாப்டர் ஒன்று பறந்தது. உடனடியாக அதனை வீடியோவாக படம் பிடிக்க தொடங்கினர். வானில் பறந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் அங்கு காணப்பட்ட பனி மூட்டத்திற்குள் சென்று மறைந்து விட்டது.



மறைந்த சில நொடிகளிலேயே அது மறைந்த இடத்தில் இருந்து பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. உடனே அங்கிருந்த சுற்றுலா பயணிகள் வானில் பறந்து சென்ற ஹெலிகாப்டர் கீழே விழுந்து விட்டதா? என தன்னுடன் இருப்பவர்களிடம் கேட்கிறார்.

ஹெலிகாப்டர் வானத்தில் பறப்பதையும், பனிமூட்டத்திற்குள் சென்று மறைவதையும், சிறிது நேரத்தில் கீழே விழும் சத்தம் கேட்பதையும் சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். அந்த காட்சிகளை பின்னர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.


Tags:    

Similar News