உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பதவி ஏற்கிறார்கள்

Published On 2021-12-06 05:51 GMT   |   Update On 2021-12-06 07:01 GMT
தலைமைக் கழகத்துக்கு வந்து சான்றிதழை பெற்றுக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இன்றே அங்கு பதவி ஏற்றுக் கொள்ள உள்ளனர்.

சென்னை:

அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் 5 ஆண்டுக்கு ஓருமுறை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதா இருந்த போது 2014-ம் ஆண்டு கட்சி தேர்தல் நடந்தது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு தேர்தலை நடத்தி இருக்க வேண்டும்.

அந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் கட்சி தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி போனது.

இந்த நிலையில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த 2-ந் தேதி கட்சி தலைமை வெளியிட்டது.

அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு முதலில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதன்பிறகு கிளை கழகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளுக்கும் வருகிற 13-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலுக்கு கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் தலைமைக் கழகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.

கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக இருந்து வேட்பு மனுக்களை வாங்கினார்கள்.

இதில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

 


மேலும் இவர்களது பெயரில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் வேட்புமனு அளித்தனர்.

மேலும் சில நிர்வாகிகள் கட்சியில் தனக்கு செல்வாக்கு உள்ளது. நாங்கள் இந்த பதவிக்கு போட்டியிடுகிறோம் என்றும் வேட்பு மனு அளித்தனர்.

முதல் நாளான 3-ந் தேதி 154 மனுக்கள் வந்திருந்தது. 2-ம் நாளான 4-ந் தேதி 98 மனுக்கள் வந்தது. மொத்தம் வந்திருந்த 252 மனுக்களையும் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வைத்து பரிசீலனை செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தொடர்ந்து 5 ஆண்டு அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை புதுப்பித்தவராக இருக்க வேண்டும் என்பதால் அதை அடிப்படையாக வைத்து பரிசீலனை செய்யப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன் மொழிந்திருக்க வேண்டும். 15 பேர் வழி மொழிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த 30 பேரும் தொடர்ச்சியாக 5 ஆண்டு அ.தி.மு.க. உறப்பினராக இருந்திருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு பரிசீலனை செய்தனர்.

இதில் 100-க்கும் மேற்பட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதி வாய்ந்த மனுக்கள் அனைத்தும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்தது.

எனவே இந்த 2 பதவிகளுக்கும் போட்டி ஏற்படாததால் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் அதே பதவிகளில் அமர உள்ளனர்.

இவர்கள் இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு தலைமை கழகத்தில் அறிவிக்க உள்ளனர்.

தேர்தல் ஆணையர்களாக உள்ள அமைப்புச் செயலாளர்கள் சி.பொன்னையன், முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முறைப்படி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க உள்ளனர்.

தலைமைக் கழகத்துக்கு வந்து சான்றிதழை பெற்றுக் கொள்ளும் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இன்றே அங்கு பதவி ஏற்றுக் கொள்ள உள்ளனர்.

அதன்பிறகு வெற்றி சான்றிதழுடன் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளனர்.

இதையொட்டி அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதையும் படியுங்கள்... சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை- காத்திருக்கும் நேரம் குறைப்பு

Tags:    

Similar News