உள்ளூர் செய்திகள்
மலைச்சாலையில் பாறை மற்றும் மரம் முறிந்து விழுந்து கிடக்கும் காட்சி.

தொடர் மழையால் பாதிப்பு: போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகள், மரம் முறிந்து விழுந்தது- போக்குவரத்து மாற்றம்

Published On 2021-12-03 10:22 GMT   |   Update On 2021-12-03 10:22 GMT
போடிமெட்டு மலைச் சாலையில் அடுத்தடுத்து பாறைகள் மற்றும் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலசொக்கநாதபுரம்:

தமிழகம் - கேரளாவை இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. குறிப்பாக போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கன மழை பெய்ததால் போடிமெட்டு - பூப்பாறை இடையே பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள் ரோட்டில் சாய்ந்து விழுந்ததால் முந்தல் மலையடிவாரத்தில் இருந்து போடி மெட்டு வரை சுமார் 50 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

9 முதல் 17-வது கொண்டை ஊசி வளைவு வரை 30 இடங்களில் பழமையான மரங்களும், பாறைகளும் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகள் விழுந்த இடத்தில் அதனை அகற்றி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இருந்த போதும் மழை விட்டு விட்டு பெய்து வருதாலும் கனரக வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்படுவதாலும் அதிர்வு காரணமாக தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலையில் 6-வது கொண்டை ஊசி வளைவில் பாறை உருண்டு விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இன்று காலையில் புலி ஊத்து என்ற இடத்தில் ராட்சத மரம் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. இதனையடுத்து அங்கு ஊழியர்கள் சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போடி மெட்டு மலைச் சாலையில் இரவு நேரங்களில் போக்கு வரத்துக்கு கடந்த சில நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை சற்று குறைந்திருந்த போதும் நாளை முதல் மீண்டும் கன மழை எச்சரிக்கை தேனி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாறைகள், மரங்கள் விழுந்து பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

மண் சரிவு காரணமாக நேற்று இரவு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்று காலை முதல் குறைந்த அளவு வாகனங்களே செல்ல அனுமதிக்கப்பட்டது.

தொடர்ந்து பாறைகள் உருண்டு வருவதால் பயணிகள் குமுளி வழியாக கேரளாவுக்கு சுற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இதனால் 110 கி.மீ தூரம் சுற்றி செல்லும் நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நெருக்கடியை சந்தித்துள்ள வாகன ஓட்டிகள் மற்றும் காய்கறி ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுனர்களும் இதனால் மேலும் சிரமம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News