உள்ளூர் செய்திகள்
பேஸ்புக்

பேஸ்புக்கில் பழகி போலீஸ்காரர்- உறவினரிடம் ரூ. 34 லட்சம் பறித்த இளம்பெண்

Published On 2021-12-03 10:14 GMT   |   Update On 2021-12-03 10:14 GMT
திருமணம் செய்வதாக கூறி மருத்துவ மாணவி போல் பேஸ்புக்கில் பழகி போலீஸ்காரர் மற்றும் அவரது உறவினரிடம் ரூ. 34 லட்சம் பறித்த இளம்பெணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆவடி:

ஆவடியை சேர்ந்த திருமணம் ஆன இளம்பெண் ஒருவர் பேன்சி கடை வைத்துள்ளார். இவரது கணவர் ஆந்திர மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பேஸ்புக்கில் மருத்துவ மாணவி என்று இளம்பெண் பதிவிட்டு மணிமுத்தாறில் போலீசாக பணியாற்றி வருபவருடன் பழகினார். இருவரும் செல்போனில் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்தனர்.

இளம்பெண் திருமணம் செய்து கொள்வதாக போலீஸ்காரரிடம் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய போலீஸ்காரர் ரூ. 14 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை வங்கி கணக்கு மூலம் பெற்றுக் கொண்ட இளம்பெண் பின்னர் போலீஸ்காரரிடம் பேசுவதை துண்டித்து விட்டார். இதனால் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

இதற்கிடையே போலீஸ்காரரின் பேஸ்புக்கில் நண்பராக இருந்த அவரது உறவினர் ஒருவரையும் அந்த இளம்பெண் தனது ஆசைவார்த்தை மூலம் வீழ்த்தினார். அவரையும் திருமணம் செய்வதாக கூறி ரூ. 20 லட்சம் பெற்றதாக தெரிகிறது.

திருமண ஆசையில் அந்த வாலிபரும் இளம்பெண்ணுக்கு ஒரு பவுனில் நகை, வெள்ளி கொலுசு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. நகை-பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் இளம்பெண் அந்த வாலிபரையும் கழற்றி விட்டார். பேசுவதையும் துண்டித்தார்.

இதனால் பணத்தை இழந்த போலீஸ்காரரும், அவரது உறவினரும் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்தனர். அவர்களிடம் பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருமண ஆசைவார்த்தை கூறி வீழ்த்தியது ஆவடியை சேர்ந்த இளம்பெண் என்பது தெரிந்தது.

இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News