உள்ளூர் செய்திகள்
முல்லைப்பெரியாறு அணை

பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டியது

Published On 2021-12-02 05:12 GMT   |   Update On 2021-12-02 05:12 GMT
கூடுதல் தண்ணீர் திறப்பால் 142 அடிக்கு கீழ் சரிந்த பெரியாறு அணை நீர்மட்டம் இன்று மீண்டும் 142 அடியில் நிலைநிறுத்தப்பட்டது.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29-ந் தேதி இரவு 142 அடியை எட்டியது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் கேரள பகுதிக்கு உபரியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இடுக்கி மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் நேற்று பெரியாறு அணையின் நீர்மட்டம் 141.90 அடியாக சரிந்தது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை மீண்டும் அணையின் நீர்மட்டம் 142 அடியில் நிலைநிறுத்தப்பட்டது. அணைக்கு நீர்வரத்து 3166 கன அடியாக உள்ளது.

தமிழக பகுதிக்கு 1867 கன அடியும், கேரள பகுதிக்கு 1126 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 7666 மி.கன அடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 70.11 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று காலை 5391 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 4344 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் இருப்பு 5855 மி.கன அடியாக உள்ளது. தொடர்ந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது மழை சற்று குறைந்திருந்த போதிலும் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்று அதிகாரிகள் அணை பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைகை அணை 8.8, வீரபாண்டி 41.2, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 35, போடி 18.2, ஆண்டிபட்டி 4, அரண்மனைப்புதூர் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News