உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஒமிக்ரான் வைரஸ் - திருப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிர கண்காணிப்பு

Published On 2021-12-01 06:43 GMT   |   Update On 2021-12-01 06:43 GMT
கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவிட்டதால் மக்களிடையே விழிப்புணர்வும் குறைந்துபோயுள்ளது.
திருப்பூர்:

கொரோனா அலை ஓயும் நிலையில் வெளிநாடுகளில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தென்பட்ட இந்த வைரஸ், ஐரோப்பாவிலும் பரவலை தொடங்கி உள்ளது.

தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. மீண்டும் ஊரடங்கு அமலானால் வர்த்தகம் பாதிக்கப்படுமோ என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில்:

கொரோனா ஒழிந்தது என நிம்மதி அடைந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் சர்வதேச ஆடை வர்த்தக சந்தை முடங்கிவிடுமோ? ஆர்டர் இழப்பு ஏற்படுமோ என திருப்பூர் ஏற்றுமதியாளர் மனதில் கவலைகள் சூழ்ந்துள்ளன. வைரஸ் தொற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என இந்த உலகம் கற்றுக்கொண்டுவிட்டது.

தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகின்றன. அதனால் அச்சப்பட தேவையில்லை. அதேநேரம் அலட்சியமாகவும் இருந்து விடக்கூடாது. வெளிநாடுகளில் வைரஸ் பரவல் அதிகரித்தால்  திருப்பூர் உட்பட இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்துறை பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. 

சர்வதேச பிராண்டட் நிறுவனங்கள் ஆன்லைன் ஆடை வர்த்தகத்தில் ஈடுபடத் துவங்கிவிட்டன. எனவே ஆடை வர்த்தகம் முழுமையாக முடங்கிவிடாது. இந்தியா உட்பட உலகளாவிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

ஏற்றுமதியாளர்கள் பயப்பட தேவையில்லை. வர்த்தக வாய்ப்புகளை வசப்படுத்துவதற்கான முயற்சிகளை துணிச்சலுடன் மேற்கொள்ளவேண்டும் என்றார். புதிய வகை கொரோனாவை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பில் கவனமாக இருக்க மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கொரோனா இரண்டாவது அலையின் போது வெளியிடப்பட்டது போன்ற பிரத்யேக வழிகாட்டு நெறிமுறை விரைவில் வெளியாக உள்ளது.

அதன் பின் மாவட்ட அளவில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். அதன் பின், தாலுகா, வட்டார அளவில் ஒமிக்ரான் தடுக்கும் வழிமுறை, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை பணிகள் குறித்து உத்தரவிடப்பட உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில்:

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கோவை வருவோர் திருப்பூர் மாவட்ட முகவரி கொண்டவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை யாரும் அவ்வாறு வரவில்லை. வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர். 

மாநில எல்லைகளில் குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் பயமின்றி பாதுகாப்புடன் இருக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

இதனிடையே கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துவிட்டதால் மக்களிடையே விழிப்புணர்வும் குறைந்துபோயுள்ளது. பொதுமக்கள் சரியான நோய் தடுப்பு வழிமுறையை பின்பற்றுவதில்லை.

முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற நோய் தடுப்பு நடவடிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஒமிக்ரான் புதிய வகை வைரசால் தொற்று பரவல் அதிகரிக்குமென சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

சுகாதாரத்துறையினர் கூறுகையில்:

ஊரடங்கு முழுமையாக திரும்ப பெறவில்லை. மக்கள் வசதிக்காக தளர்வு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருவதால், ‘ஒமிக்ரான்’ தொற்று பரவலுக்கு இடமளிக்காமல் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். விடுபட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News