செய்திகள்
கோப்புபடம்

ஆயத்த ஆடைகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தக்கூடாது-மத்திய அரசிடம் திருப்பூர் உற்பத்தியாளர்கள் முறையீடு

Published On 2021-11-28 08:24 GMT   |   Update On 2021-11-28 08:24 GMT
ஜவுளி துறை சார்ந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் ஏற்படுத்துவதால் கள்ளச்சந்தை உருவாகும் என காடா துணி உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள்  உள்ளன. இதன் மூலம் லட்சக்கணக்கான  தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். மேலும் இங்கு தயாரிக்கப்படும் ஆடைகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.30ஆயிரம் கோடி அளவில் ஆடை வர்த்தகம் நடக்கிறது. கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில் தற்போது ஜி.எஸ்.டி. வரி உயர்வு திருப்பூர் பின்னலாடை துறையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விலையுள்ள ஆடைக்கு 5 சதவீதம், ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள ஆடைக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி தற்போது நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆயத்த ஆடைகளுக்கான வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது.

அதன்படி வரும் 2022 ஜனவரி 1-ந்தேதி முதல் அனைத்து விலை மதிப்பிலான ஆடைகளுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி அமலுக்கு வருகிறது. வரி விகிதம் உயர்வு உள்நாட்டு சந்தைக்கு ஆடை தயாரிக்கும் திருப்பூர் பகுதி குறு, சிறு பின்னலாடை துறையினரை கவலை அடையச் செய்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அனைத்து பின்ன லாடைகளுக்கும் ஜி.எஸ்.டி., வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப் பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் பின்னலாடை ரகங்களை மட்டுமே வாங்கி அணிகின்றனர். 

ஒரு தொழிலாளி இரண்டு செட் ஆடை வாங்க ரூ.500க்கு மேல் செலவிட வேண்டியுள்ளது.ஜி.எஸ்.டி.,வரி உயர்வால் ஆடை விலை மேலும் அதிகரிக்கும். இதனால் அடித்தட்டு மக்கள் மிகவும் சிரமப்படுவர். 

எனவே ஆயத்த ஆடைகளுக்கான வரியை உயர்த்த கூடாது. ஆயிரம் ரூபாய்க்கு கீழ் விலை மதிப்புள்ள பின்னலாடை ரகங்களுக்கு 5 சதவீதம் என்கிற இதே நிலையில் வரி விகிதம் தொடரவேண்டும். இல்லாவிடில் ரூ.500க்கு கீழ் விலையுள்ள ஆடை களுக்காவது வரி விகித சலுகை அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜவுளி துறை சார்ந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் ஏற்படுத்துவதால் கள்ளச்சந்தை உருவாகும்  என காடா துணி உற்பத்தி யாளர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.திருப்பூர், கோவை மாவட்டங்களில் காடா துணி உற்பத்தி தொழில் பரவலாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் பஞ்சு, நூல், துணி, மற்றும் செயற்கை இழை உள்ளிட்ட ஜவுளித்துறை சார்ந்த பல்வேறு பொருட்களுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து பல்லடம் காடா துணி உற்பத்தியாளர்கள் கூறிய தாவது:-

திருப்பூர், பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் காடா உற்பத்தி தொழில் பரவலாக நடக்கிறது. தினசரி ஒரு கோடி மீட்டர் துணிகள் உற்பத்தி ஆகின்றன. பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக காடா துணி உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வரும் பலர் தொழிலை விட்டு செல்லும் யோசனையில் உள்ளனர். இதற்கிடையே ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பஞ்சு, நூல் ஆகியவற்றுக்கு பழையபடி 5 சதவீதமும், துணிக்கு 5ல் இருந்து 12 சதவீதம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பஞ்சு, நூல் சார்ந்துதான் காடா துணி உற்பத்தி நடக்கிறது. ஜவுளி தொழிலை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்ததை வரவேற்கிறோம். துணிக்கு மட்டும் 12 சதவீதமாக உயர்த்துவதால் மீண்டும் கள்ளசந்தை உருவாகும் அபாயம் உள்ளது.

காடா துணிகளை ஏழை மக்களே அதிக அளவில் பயன்படுத்துவதால் ஜி.எஸ்.டி., உயர்வு ஏழை மக்களை பாதிப்படைய செய்யும். மேலும் நூல் விலை உயர்வால் ஏற்கனவே ஜவுளி தொழில் தடுமாறி வருகிறது. எனவே காடா துணி சார்ந்த பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வரப்படும் வேறுபாடுகளை தவிர்க்க மத்திய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
Tags:    

Similar News