செய்திகள்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறியாளர்கள்.

பல்லடம் அருகே வங்கியை முற்றுகையிட்ட விசைத்தறியாளர்கள் 700 பேர் கைது

Published On 2021-11-19 10:48 GMT   |   Update On 2021-11-19 10:48 GMT
செந்தில்குமாரின் ஆவணங்களை உடனடியாக திருப்பி வழங்கக்கோரி சுல்தான் பேட்டை இந்தியன் வங்கி முன்பு விவசாயிகள், விசைத்தறியாளர்கள் 200 பேர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள சுல்தான் பேட்டை இந்தியன் வங்கியில் நல்லூர்பாளையம் விவசாயி செந்தில்குமார் விசைத்தறிகூடம் அமைப்பதற்கு நில பத்திரங்களை வைத்து கடன் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் ஓ.டி.எஸ். செட்டில்மெண்ட் திட்டம் மூலம் கடன் தொகையை கட்டி முடித்து விட்டார். ஆனால் கடன் தொகை செலுத்திய பின்னரும் சொத்து பத்திரத்தை திருப்பி தராமல் வங்கி அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். 

இதுகுறித்து பலமுறை கேட்டும் வங்கி நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறது. 

இதனால் அடமானம் வைக்கப்பட்ட செந்தில்குமாரின் ஆவணங்களை உடனடியாக திருப்பி வழங்கக்கோரி சுல்தான் பேட்டை இந்தியன் வங்கி முன்பு விவசாயிகள், விசைத்தறியாளர்கள் 200 பேர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சுல்தான்பேட்டை போலீசார் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

கடன் தொகை செலுத்தியும் ஆவணங்களை திருப்பித் தர மறுக்கும் இந்தியன் வங்கியை கண்டித்து முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி எங்களை திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்ற போலீசார் பின்னர் எங்களை கைது செய்துள்ளதாக கூறுகின்றனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். 

அடமானம் வைத்த பத்திரங்களை திருப்பித் தரும் வரை எங்களது போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News