செய்திகள்
கைது

தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2021-11-17 09:20 GMT   |   Update On 2021-11-17 09:20 GMT
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மஞ்சள், கடல் அட்டை போன்ற மருத்துவ பொருட்களும், கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களும் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க கடலோர காவல்படையினரும், உள்ளூர் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று காலை மாநகர தனிப்பிரிவு போலீசார் பென்சிங், திருமணி, மாணிக்கராஜ் உள்ளிட்ட வர்கள் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரத்தை நோக்கி சென்ற ஒரு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் 25 கிலோ கஞ்சா கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில் வேனை ஓட்டி வந்தவர் மதுரை ஜே.ஜே. நகரை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி (வயது29) என்பதும், மதுரையில் இருந்து தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் தூத்துக்குடி வடபாகம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸ் பாண்டி எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார்? யாரிடம் கொடுக்க சென்றார்? இதில் தூத்துக்குடியை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் துறைமுகம் இருப்பதாலும், பல்வேறு தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பணிபுரிவதாலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் இங்கு அதிகளவு கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை அதிக அளவு உள்ளதாகவும், சில மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News