செய்திகள்
கோப்புபடம்

மழைக்கால மின் விபத்துக்களை தவிர்க்கும் வழிமுறைகள் - மின்வாரியம் அறிவிப்பு

Published On 2021-11-10 08:29 GMT   |   Update On 2021-11-10 08:29 GMT
இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்றவைகளிலோ தஞ்சமடையுங்கள்.
திருப்பூர்:

வடகிழக்கு பருவமழை 2021-ன் காரணமாக புயல் மற்றும் வெள்ளக் காலத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்ப்பது குறித்த வழிமுறைகள் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கோவை மண்டல தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 இடி அல்லது மின்னலின்போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பேருந்து, கார், வேன் போன்றவைகளிலோ தஞ்சமடையுங்கள். இடி அல்லது மின்னலின் போது குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழோ தஞ்சம் புகாதீர்கள். 

இடி மின்னலின் போது திறந்த நிலையில் உள்ள ஜன்னல்கள், கதவு போன்றவற்றின் அருகில் இருக்காதீர்கள். இடி இடிக்கும்போது கண்டிப்பாக தொலைக்காட்சி பெட்டிக்கு வரும் கேபிளின் தொடர்பை துண்டித்து விடுங்கள். சாய்ந்த மின் கம்பங்களுக்கு அருகில் நிற்காதீர்கள்.   

மின் மாற்றியில் எரியிழை போயிருப்பின் அதனை சரி செய்ய மின் ஊழியர்களிடம் தெரிவிக்கவும். மின் மாற்றி பழுது, மின்தடை, மின் விபத்து மற்றும் மின் இடையூறுகளுக்கு உரிய பிரிவுப் பொறியாளர்களை தொடர்பு கொள்ளவும். மழை காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள் (இழுவை கம்பிகள்) ஆகியவற்றின் அருகே செல்லாதீர்கள்.

வீட்டில் உள்ள மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே வீட்டிலுள்ள மெயின் சுவிட்சினை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டு அணைத்து விட்டு உடனடியாக அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கவும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்கவும்.

இடி அல்லது மின்னலின் போது தஞ்சம் அடைய அருகில் எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள். மரங்கள். உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுங்கள். இடி அல்லது மின்னலின் போது டிவி. மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். 

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாமலும். மிதிக்காமலும் இருக்கவும். இது குறித்து உடனடியாக மின் வாரிய அலுவலர்களிடம் தெரிவிக்கவும். ஈரமான கைகளை உபயோகப்படுத்த வேண்டாம். மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள  

இழுவை கம்பி மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காயவைக்கும் செயலை தவிர்க்கவும், ஈஎல்.சி.பி (மின் கசிவு தடுப்பான்)-யை பயனீட்டாளரின் இல்லங்களில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் மின்விபத்தை தவிர்த்திடுவீர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News