செய்திகள்
மாணவ- மாணவிகளுக்கு உலக சாதனைக்கான சான்றிதழை பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வழங்கிய போது எடுத்த படம்.

பரமக்குடி அருகே 24 மணிநேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை

Published On 2021-10-29 13:26 GMT   |   Update On 2021-10-29 13:26 GMT
பரமக்குடி அருகே இல்லம் தேடி கல்வித்திட்டத்தை வரவேற்று உலக சாதனைக்காக 24 மணிநேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பரமக்குடி:

பரமக்குடி அருகே உள்ள கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தை வரவேற்று 7 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட மாணவ -மாணவிகள் உலக சாதனைக்காக 24 மணி நேர தொடர் சிலம்பாட்ட நிகழ்வு நடந்தது.

இதில் 25 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு 27-ந் தேதி மாலை 4 மணிக்கு சிலம்பு சுற்ற தொடங்கினர். 28-ந் தேதி மாலை 4 மணிக்கு சிலம்பம் சுற்றுவதை நிறுத்தினர். தொடர்ந்து இரவு, பகலாக 24 மணி நேரம் இந்த நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வுக்கு டிரம்ப் உலக சாதனை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி முக்தாபிரதாப், தென்மண்டல நடுவர் சம்பத்குமார் ஆகியோர் பார்வையிட்டு உலக சாதனைக்கான சான்றிதழை மாணவ, மாணவிகளிடம் வழங்கினர்.

இந்த உலக சாதனைக்கான சிலம்பாட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி, உதவி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோரை பாராட்டினர். அதைத் தொடர்ந்து இதில் பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை தாங்கினார். போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யாகுணசேகரன், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் கதிரவன், ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழாம்பல் ஊராட்சி தலைவர் நாகம்மாள் சேது பாண்டி அனைவரையும் வரவேற்று கவுரவித்தார். இதில் கிராம பொது மக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News