செய்திகள்
சசிகலா

சசிகலா சுற்றுப்பயணத்தை தொடங்கினார்- ஆதரவாளர்களை சந்திக்க ஏற்பாடு

Published On 2021-10-27 03:24 GMT   |   Update On 2021-10-27 03:24 GMT
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 29-ந்தேதி பயணம் மேற்கொள்ளும் சசிகலா ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார்.
சென்னை:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த ஜனவரி மாதம் விடுதலை ஆனார். அந்த நேரத்தில், சட்டமன்ற தேர்தல் பணிகளும் தொடங்கியதால், சசிகலா தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று சொன்ன அவர், பின்னர் திடீரென பின்வாங்கினார். தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, அ.தி.மு.க. தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேச தொடங்கினார்.

அவருடன் தொலைபேசியில் பேசியவர்கள் அ.தி.மு.க. கட்சியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த நிலையில், அ.தி.மு.க. பொன் விழா தொடங்கியபோது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா, மறுநாள் தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம், ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

தற்போது, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக கருத்து தெரிவித்திருப்பது கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளும் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், சசிகலா சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அ.தி.மு.க. கொடியுடன் அவர் தஞ்சாவூர் புறப்பட்டார். அங்கு இன்று நடைபெறும் டி.டி.வி.தினகரனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

நாளை தஞ்சாவூரில் இருந்து மதுரை செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேவர் மற்றும் மருது சகோதரர்களின் சிலைகளுக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு, அங்கு தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு கோரிப்பாளையம் பகுதியில் நடக்க இருக்கிறது.

29-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் சசிகலா அங்கும் ஆதரவாளர்களை சந்தித்து பேசுகிறார். 30-ந்தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் அவர் கலந்துகொள்கிறார். பின்னர், ஆதரவாளர்களை சந்திக்கிறார்.

பின்னர், அங்கிருந்து தஞ்சாவூர் புறப்பட்டு வருகிறார். நவம்பர் 1-ந்தேதி தஞ்சாவூரில் ஆதரவாளர்களை சந்தித்து பேசும் சசிகலா, அதன்பிறகு நெல்லை உள்பட தென்மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
Tags:    

Similar News