செய்திகள்
உடுமலையில் மழையால் சாய்ந்த கரும்புகள்.

திருப்பூரில் இன்று அதிகாலை பலத்த மழை - உடுமலையில் 30 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாய்ந்தன

Published On 2021-10-26 07:25 GMT   |   Update On 2021-10-26 07:25 GMT
தண்ணீரை அகற்றும் பணியிலும், கொசு ஒழிப்பு பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
 
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. 

இந்தநிலையில் இன்று அதிகாலை திருப்பூர் மாநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. 

மழையின் காரணமாக திருப்பூர் மாநகர் பகுதியில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு சிதலமடைந்துள்ளது-. தெருக்களில் சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  

தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாவதுடன் சுகாதார சீர் கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே தண்ணீரை அகற்றும் பணியிலும், கொசு ஒழிப்பு பணியிலும் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி  மீட்டரில் விவரம் வருமாறு:

திருப்பூர் வடக்கு-25, அவினாசி-78, பல்லடம்-3, ஊத்துக்குளி-6.60, காங்கயம்-5.40, குண்டடம்-12, திருப்பூர் தெற்கு -21, கலெக்டர் கேம்ப் ஆபீஸ்-59. மாவட்டம் முழுவதும் மொத்தம் 231 மி.மீ.மழை பெய்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுமார் 30 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

அமராவதி பாசன பகுதியான கொழுமம், குமரலிங்கம், சாமராய பட்டி, நீலம்பூர், கண்ணாடிப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனர். 10 மாத பயிரான கரும்பு பயிர் தற்போது 4 மாத வளர்ச்சியை பெற்றுள்ளது.

இந்நிலையில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளன. சுமார் 30 ஏக்கரில் கரும்பு பயிர்கள் அடியோடு சாய்ந்துவிட்டன.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில்:

கரும்பு பயிர் சாய்ந்ததால் எங்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. கூலி ஆட்களை அமர்த்தி அனைத்து கரும்புகளையும் கயிற்றால் இறுக்கி கட்ட வேண்டும். ஈரப்பதம் காய்ந்தவுடன் கரும்பு வளர்ச்சி அடைய தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால் அறுவடை செய்யும்போது லாபம் கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளது என கூறினர்.
Tags:    

Similar News