செய்திகள்
கோப்புபடம்

1-ந்தேதி பள்ளிகள் திறப்பு - முககவசம், சானிடைசரை சொந்த செலவில் வாங்கும் ஆசிரியர்கள்

Published On 2021-10-22 06:02 GMT   |   Update On 2021-10-22 06:02 GMT
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை நிதியில் தொகை ஒதுக்கீடு செய்து சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்படுகிறது.
உடுமலை:

உடுமலை கல்வி மாவட்டத்தில் 118 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் வரும் நவம்பர் 1-ந்தேதி முதல் நேரடி வகுப்புகள் துவக்கப்படவுள்ளன. இதற்காக பள்ளிகள்தோறும் சுத்தப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. 

பணியாளர்களின் உதவியுடன் வகுப்பறைகள், தளவாடப் பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப்பின் நேரடி வகுப்பில் மாணவர்கள் பங்குபெற உள்ளதால் நேர்மறை சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏதுவாக பள்ளிச்சூழல் இனிமையாக மாற்றம் செய்யப்படுகிறது.

ஆனால் இப்பள்ளிகளில் சானிடைசர், முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட பொருட்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேலாண்மை நிதியில் தொகை ஒதுக்கீடு செய்து சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்படுகிறது. ஆனால் துவக்கப்பள்ளிகளுக்கு எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே முகக்கவசம் அணிவதை வழக்கமாகக் கொள்வர். அவ்வகையில் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News