செய்திகள்
கோப்புபடம்

கோவையில் குடிபோதையில் தந்தையை கொலை செய்த பெயிண்டர் கைது

Published On 2021-10-15 09:49 GMT   |   Update On 2021-10-15 09:49 GMT
கோவை அருகே குடிபோதையில் தந்தையை மகன் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை:

கோவை பீளமேடு நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ராஜூ என்கிற துரைராஜ் (வயது 73).

சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பெருமாள் கோவில் வீதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரது மகன் ரவிராஜ் (49) பெயிண்டர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை துரைராஜ் கண்டித்தார். இதனால் தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிராஜ் தனது தந்தையை கீழே தள்ளினார்.

பின்னர் அவர் மீது அமர்ந்து தலை முடியை பிடித்து தரையில் அடித்து தாக்கினார். இதில் மண்டை உடைந்து சம்பவஇடத்திலேயே துரைராஜ் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் ரவிராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த துரைராஜின் மனைவி தனது கணவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குடிபோதையில் தந்தையை மகன் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் இறந்த துரைராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை கொலை செய்த ரவிராஜை தேடி வந்தனர். நேற்று இரவு அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News