செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாததால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

Published On 2021-10-13 04:35 GMT   |   Update On 2021-10-13 04:35 GMT
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
மடத்துக்குளம்:

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் விவசாயம் பிரதானமாக உள்ளது. பி.ஏ.பி., அமராவதி பாசன திட்டங்கள், வேளாண், தோட்டக்கலை, பட்டு வளர்ச்சித்துறை என பல்வேறு துறைகளின் மானியத்திட்டங்கள், பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காண கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் கோட்டாட்சியர் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு வந்தது.

கூட்டத்தில் வேளாண் சார்ந்த அனைத்துத் துறையினர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ், ஊரக வளர்ச்சி என துறை அதிகாரிகள் பங்கேற்றதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து வந்தது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல், கொரோனா பரவல் என ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் முக்கிய சாகுபடி சீசனில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் தள்ளுபடி, தரமில்லாத விதைகள், பாசன திட்ட நீர் நிர்வாக குளறுபடிகள், தேங்காய் விலை சரிவு என பல்வேறு முக்கிய பிரச்சினைகளால் இரு தாலுகா விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர்.  

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே விவசாயம் பிரதானமாக உள்ள உடுமலை பகுதியில், \மீண்டும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News