செய்திகள்
பேரணியில் பங்கேற்றவர்கள்.

உடுமலையில் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Published On 2021-10-07 06:46 GMT   |   Update On 2021-10-07 06:46 GMT
பேரணி அமராவதி வழியாக சென்று முதலை பண்ணையில் நிறைவுற்றது.
உடுமலை:

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் அடங்கும். இங்கு யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் அரியவகை தாவரங்கள் மற்றும் ஏராளமான சிறு உயிரினங்களும் வசித்து வருகின்றன.

வனத்தின் இயல்பை காப்பதிலும் இயற்கையைப் பேணுவதிலும் வன விலங்குகளின் பங்கு முக்கியமானதாகும். அவற்றின் மகத்துவத்தை தெரிந்து கொள்ளும் விதமாக வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வனவிலங்கு வார விழாவும் அடங்கும். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தொடங்கிய இந்த விழாவானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உடுமலையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ்ராம் தலைமை வகித்தார். 

உடுமலை மற்றும் அமராவதி வனச்சரக அலுவலர்கள் தனபாலன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதைத் தொடர்ந்து ஒன்பதாறு சோதனைச்சாவடியில் பேரணி தொடங்கியது. 

அப்போது வனத்தின் தன்மை மற்றும் இயற்கையை பாதுகாப்பது, வனவிலங்குகளின் முக்கியத்துவம் குறித்த பதாகைகளுடன் பேரணியாகச் சென்றனர்.

பேரணி அமராவதி வழியாக சென்று முதலை பண்ணையில் நிறைவுற்றது. இதில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News