செய்திகள்
கோப்புபடம்

மழை பெய்யும் நேரத்தில் ஈரமான கைகளால் சுவிட்ச்சை தொடக்கூடாது-பல்லடம் மின்வாரிய அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2021-10-03 07:16 GMT   |   Update On 2021-10-03 07:16 GMT
மழை பெய்து கொண்டிருக்கும்போது டி.வி.,மற்றும் கேபிள் இணைப்புகளை அணைத்து விட வேண்டும்.
பல்லடம்:

பருவமழை காலங்களில் மின் விபத்து ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கயம் உள்ளிட்ட தாலுகாக்களில் தற்போது வடகிழக்கு பருவமழை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கையாக மழைபெய்யும் சமயங்களில் இடி,மின்னல் ஏற்படும் போது அருகே உள்ள கட்டிடம் அல்லது வாகனங்களுக்குள் சென்றுவிட வேண்டும்.

குடிசை வீடு, மற்றும் மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. மின்மாற்றி  மற்றும் சாய்ந்த மின்கம்பங்களுக்கு அருகேயும் நிற்கக்கூடாது. வீடுகளில் திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்பதை தவிர்க்க வேண்டும்.மழை பெய்து கொண்டிருக்கும்போது, டிவி,மற்றும் கேபிள் இணைப்புகளை அணைத்து விட வேண்டும். 

மிக்சி,கிரைண்டர், டி.வி.,கம்ப்யூட்டர் போன்ற மின்சாதனங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்,அவசர தேவை இல்லாவிட்டால் அவைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய ஊழியரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாதனங்களில் மின் அதிர்வு ஏற்பட்டால் மெயின் சுவிட்ச் ஆப் செய்துவிட வேண்டும்.

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் நிற்கவோ, நடக்கவோ கூடாது. தரையில் அறுந்து விழுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகே செல்லக்கூடாது. ஈரமான கையுடன் சுவிட்ச்சை தொடக்கூடாது.மின்வாரிய ‘ஸ்டே’கம்பி மற்றும் மின்கம்பத்தில் கயிறு கட்டி  துணிகள் உலர்த்தக்கூடாது.

வீடுகளில் மின்கசிவு தடுப்பான் பொருத்தி, மின் விபத்துகளை தவிர்க்கலாம். மழைகாலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து மின் விபத்துகள் ஏற்படாமல் பொதுமக்கள் கவனமுடன் செயல்படவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News