செய்திகள்
மின்சாரம் தாக்கி பலியான திருப்பதி மற்றும் அவரது மகன்கள்.

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன்கள் பலி

Published On 2021-10-01 05:40 GMT   |   Update On 2021-10-01 05:40 GMT
திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சின்னாளபட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகில் உள்ள செட்டியபட்டி மடப்புரம் காளிகோவில் அருகே வசித்து வந்தவர் திருப்பதி (வயது43). இவரது மனைவி வசந்தா (40). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு விஜயகணபதி (17), சந்தோஷ் (14) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

விஜயகணபதி 11-ம் வகுப்பும், சந்தோஷ் 9-ம் வகுப்பும் படித்து வந்தனர். இப்பகுதியில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை பெய்து வந்தது. இன்று காலை 7 மணிக்கு வசந்தா வேலைக்கு சென்று விட்டார்.

திருப்பதி தனது மகன்களை பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டு செல்வதற்காக வீட்டில் இருந்தார். பள்ளிக்கு செல்வதற்காக தனது மகன்களை தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது மின்சாதன பெட்டியில் சுவிட்சை போட்டபோது திடீரென ஷாக் அடித்தது.

இதனால் திருப்பதி பயங்கர சத்தம் போட்டு கீழே விழுந்தார். தங்களது தந்தையின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த மகன்கள் வேகமாக ஓடி வந்து அவரை தூக்க முயன்றனர். அப்போது அவர்கள் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது.

அப்போது அருகில் வசித்து வரும் முருகன் (40) மற்றும் அவரது மனைவி சூர்யா ஆகியோர் ஓடி வந்து மின்சாரம் தாக்கி விழுந்து கிடந்த 3 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இதில அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு திருப்பதி மற்றும் அவரது மகன்கள், முருகன், சூர்யா ஆகியோர் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே திருப்பதி மற்றும் அவரது மகன்கள் 3 பேரும் உயிரிழந்தனர். முருகன் மற்றும் அவரது மனைவி சூர்யா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News