செய்திகள்
சுப்பிரமணியனை கத்தியால் குத்தியதால் காயம் ஏற்பட்டுள்ளதையும், ரத்தம் சிந்தி கிடப்பதையும் படத்தில் காணலாம்.

குன்னத்தூரில் இன்று அதிகாலை பரபரப்பு - தொழிலதிபரை கத்தியால் குத்தி திருட முயன்ற கொள்ளையன்

Published On 2021-09-28 10:44 GMT   |   Update On 2021-09-28 10:44 GMT
திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது  61). இவர் அங்கு டிராக்டர்களுக்கு உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி மணிமேகலை. நேற்றிரவு இருவரும் வீட்டின் கதவை  பூட்டிவிட்டு அயர்ந்து தூங்கினர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் மின்தடை ஏற்பட்ட போது வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்கவே, சுப்பிரமணியன் எழுந்து பார்வையிட சென்றார். 

அப்போது வீட்டின் வெளியே நின்றிருந்த மர்மநபர், திடீரென கத்தியால் சுப்பிரமணியனின் கழுத்தில் குத்த முயன்றார். சுதாரித்து கொண்ட சுப்பிரமணியன் கையால் தடுத்து நிறுத்தினார். இருப்பினும் கழுத்தில் லேசான கத்திக்குத்து விழுந்தது.  

இதையடுத்து சுப்பிரமணியனின் சத்தம் கேட்டு உள்ளே தூங்கி கொண்டிருந்த அவரது மனைவி மணிமேகலை எழுந்து வெளியே வந்தார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், மணி மேகலையை தாக்கி வீட்டிற்குள் வைத்து  பூட்டியதுடன், மீண்டும் சுப்பிரமணியனை கத்தியால் குத்த முயன்றுள்ளான்.

ஆனால் சுப்பிரமணியன் லாவகமாக செயல்பட்டு கொள்ளையனிடம் இருந்து தப்பினார். இதனிடையே மணிமேகலை சத்தம் போட்டு அருகில் உள்ள பொதுமக்களை வரவழைத்தார். 

பொதுமக்கள் வரவே, கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடினான். பின்னர் காயமடைந்த சுப்பிரமணியனை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் இதுகுறித்து குன்னத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மின்தடை ஏற்பட்டதும் மர்மநபர் சுப்பிரமணியன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றுள்ளதும், சுப்பிரமணியன் தடுத்ததால் அவரை கத்தியால் குத்த முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த  ஒரு மாதமாக கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் ஏ.டி.எம்.எந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இதனால் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் குறைந்தன. தற்போது மீண்டும் தனியாக செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக இன்று குன்னத்தூரில் வீடு புகுந்து தொழிலதிபரை கத்தியால் குத்தி மர்மநபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும். 

மேலும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News