செய்திகள்
வேளாண்மை துறை சார்பில் உழவர் உற்பத்திக் குழுவிற்கு வழங்கப்பட்ட டிராக்டரை கலெக்டர் வினீத் ஆய்வு செய்த காட்சி.

உடுமலை பகுதியில் வேளாண் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2021-09-24 07:14 GMT   |   Update On 2021-09-24 07:14 GMT
உடுமலை அருகேயுள்ள பள்ளபாளையத்தில், கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட வேளாண் கருவிகளை ஆய்வு செய்து திட்ட செயல்பாடு குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
உடுமலை:

உடுமலை பகுதிகளில் வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

வேளாண்துறை சார்பில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம், வேளாண் எந்திரமயமாக்குதல், பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டம், நீர்வள நிலவளத் திட்டம், பண்ணை குட்டைகள் அமைத்தல், ஆழப்படுத்துதல், சிறு பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்தார்.

மேலும் உடுமலை அருகேயுள்ள பள்ளபாளையத்தில், கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட வேளாண் கருவிகளை ஆய்வு செய்து திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

நீரை சிக்கனமாக பயன்படுத்தும் பாசன முறையான நுண்ணீர் பாசன திட்டம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

நுண்ணீர் பாசன முறை வாயிலாக குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி, தொழிலாளர்கள் தேவை குறைவு மற்றும் உரம் சிக்கனம் குறித்து விளக்கினார்.

இத்திட்டத்தில் நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம், மின் மோட்டார் பொருத்த ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது. மானுப்பட்டி பகுதிகளில் அமைக்கப்பட்ட நுண்ணீர் பாசனத் திட்டங்களை ஆய்வு செய்து இத்திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

நல்லாறு தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டு எந்திரங்களை ஆய்வு செய்தார்.

பெரியவாளவாடியில் தோட்டக்கலைத்துறை சார்பில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.8.9 லட்சம் மானியத்தில் அமைக்கப்பட்ட பசுமைக்குடிலினை ஆய்வு செய்து தரமான நாற்றுக்ளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதாகவும், இதன் வாயிலாக மாதம் ரூ.1 லட்சம் லாபம் ஈட்டுவதாக விவசாயி ராதாகிருஷ்ணன் கூறினார்.

வேளாண் விற்பனை துறை சார்பில் முக்கோணம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தக்காளி கூழாக்கும் வாடகை எந்திரத்தையும், பொறியியல் துறையின் சார்பில் சாளையூரில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார்.

இதில் வேளாண் இணை இயக்குனர் மனோகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பிரேமாவதி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News