செய்திகள்
பெண் சிற்பங்கள்

நொய்யல் ஆற்றங்கரையில் பழமையான வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்கள் கண்டெடுப்பு

Published On 2021-09-22 12:06 GMT   |   Update On 2021-09-22 12:06 GMT
வலது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பம் 150 செ.மீ உயரமும் 45 செ.மீ.அகலமும் கொண்ட சிற்பத்தில் உள்ள பெண் தனது இடது காலை ஊன்றி வலது காலை சிறிது மடக்கி இருபங்க தோற்றத்தில் உள்ளார்.
திருப்பூர்:

திருப்பூரில் இயங்கி வரும் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், க.பொன்னுசாமி மற்றும் சக்தி பிரகாஷ் ஆகியோர் திருப்பூர் ஈரோடு மாவட்ட எல்லையில் கொடுமுடி வட்டத்தில் நொய்யல் ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ள அஞ்சூர் கிராமத்தில்  கள ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது 1,500 ஆண்டுகள் பழமையான 2 வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்களைக்கண்டுபிடித்துள்ளனர். இதைப்பற்றி ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது:-

அஞ்சூர் பாண்டீஸ்வரர் கோவில் நிர்வாகி தங்கமுத்து கொடுத்த தகவலின் அடிப்படையில் இங்குள்ள பாண்டீஸ்வரர் மற்றும் கொற்றவை கோவிலின் பின் பகுதியில் இருந்த முட்புதர்களுக்கு இடையே ஆய்வு செய்தோம். அப்போது அங்கு கொங்கு மண்டலத்தில் உள்ள சிற்ப வடிவங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வெண்சாமரம் வீசும் பெண் சிற்பங்கள் கிடந்தன.

இந்த சிற்பங்களில் உள்ள உருவம் சிறப்பு உடையது. இந்த சிற்பங்கள் கொங்கு மண்டலத்திலேயே வடிக்கப்பட்ட சிற்பங்களில் காலத்தால் முற்பட்ட கலைச்செல்வம் நிறைந்தவை ஆகும். இறைவனுக்குரிய  8 மங்கல சின்னங்களில் வெண்சாமரமும் ஒன்று. இந்த சிற்பங்கள் இங்குள்ள கி.பி. 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை கோவிலுக்கு பின்புறம் இருப்பதால் துவாரபாலகியாக ஏற்றுக்கொள்ளலாம்.
 
வலது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பம் 150 செ.மீ உயரமும் 45 செ.மீ.அகலமும் கொண்ட சிற்பத்தில் உள்ள பெண் தனது இடது காலை ஊன்றி வலது காலை சிறிது மடக்கி இருபங்க தோற்றத்தில் உள்ளார். வலது கையை மடக்கி பிடித்துள்ள வெண்சாமரம் தன் வலது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. 

தன் இடது கையை ஊரு ஹஸ்த முத்திரையில் தன் தொடையின் மீது பதித்த நிலையில் இந்த சிற்பம் காணப்படுகிறது. இடையில் இடை கச்சை ஆடை காணப்படுகிறது. இடைக்கச்சையின் வலதுபுறத்தில் தொங்கிய நிலையில் பசும்பை என்னும் மங்கலப்பொருட்கள் வைக்கும் சுருக்குப்பை காணப்படுகிறது.

காதில் குழைவகை காதணியும், கழுத்தில் கண்டிகை மற்றும் சரப்பளி வகை அணிகலன்களும், கையில் முழங்கைக்கு மேல் கடகவளை அணியும், கை மணிக்கட்டில் சூடகமும் காணப்படுகின்றன. தலையில் மகுடம் அணிந்து காணப்படும் இச்சிற்பம் சிற்பக்கலைக்கு ஒரு தனிச்சிறப்பு மிக்க மணிமகுடமாக திகழ்கிறது.

இடது பக்கம் வெண்சாமரம் உள்ள சிற்பம் 120 செ.மீ உயரமும் 60 செ.மீ அகலமும் கொண்டது. இந்த சிற்பத்தில் உள்ள பெண் தன் வலது மற்றும் இடது காலை சிறிது மடக்கி சதுர நடன அமைப்பில் உள்ளார். தன் வலது கையை மடக்கி பிடித்து உள்ள வெண்சாமரம் இடது தோளில் சாய்ந்து காணப்படுகிறது. 

இடது கையை தொடையின் மேல் வயிற்றுப்பகுதியில் ஏந்தி அர்த்த சந்திர முத்திரையில் உள்ளார். காதில் பத்திர குண்டலமும், கழுத்து மற்றும் கைகளில் அணிகலன்கள் அணிந்து காணப்படும் இச்சிற்பங்கள் சாத்விக திரு உருவ அமைப்பில் நின்ற கோலத்தில் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News