செய்திகள்
மரணம்

ராசிபுரம் அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து அரசு ஊழியர் பலி

Published On 2021-09-22 07:11 GMT   |   Update On 2021-09-22 07:11 GMT
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ரெயில்வே மேம்பாலத்தில் (கரூர்-சேலம் ரெயில் பாதை) ஓடும் ரெயிலில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் ரெயில்வே மேம்பாலத்தில் (கரூர்-சேலம் ரெயில் பாதை) ஓடும் ரெயிலில் இருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் வெண்ணந்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முஸ்டக்குறிச்சி, மேற்கு தெருவைச் சேர்ந்த காந்தி தேவர் மகன் சக்திவேல் (வயது 35) என்பது தெரியவந்தது. இவர் கமுதி வருவாய் அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக இருந்து வருகிறார்.

இவர் இன்று அதிகாலை மதுரையில் இருந்து சென்னைக்கு சென்ற ரெயிலில் பயணம் செய்திருப்பதும், தூக்க கலக்கத்தில் அல்லது படிக்கட்டில் பயணம் செய்த நேரத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையில் உள்ள பி.ஆர்.ஓ. அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றதாக தெரிகிறது. ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த சக்திவேலுக்கு தீபிகா (23) என்ற மனைவியும், அபர்ணா காந்தி (3), விகாசினி (1) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

சக்திவேல் ரெயிலிலிருந்து விழுந்து இறந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Tags:    

Similar News