செய்திகள்
கைது

கோவையில் பீடாவில் கஞ்சா, போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேர் கைது

Published On 2021-09-19 08:35 GMT   |   Update On 2021-09-19 08:35 GMT
கோவையில் பீடாவில் கஞ்சா, போதை மாத்திரை கலந்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து போதைபொருள் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோரை போலீசார் தீவிரமாக கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் உதவி கமி‌ஷனர் மணிகண்டனுக்கு கோவை ராஜவீதியில் உள்ள ஒரு பீடா கடையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.

அவரது உத்தரவின் பேரில் தனிப்படை எஸ்.ஐ மாரிமுத்து, போலீஸ்காரர் உமா, கார்த்தி, பூபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, குறிப்பிட்ட அந்த கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கடையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான நேமராம்(51) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை பீடாவுடன் கலந்து விற்றதை ஒப்புகொண்டார்.

நேமராம் தனது பீடா கடையில், ஐஸ் பீடா, சுவீட் பீடா, 420 போன்ற வகைகளை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறார். அப்போது பீடா விற்பனையில் மேலும் லாபம் பார்க்க நினைத்த அவர் பீடாவுடன் போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை கலந்து விற்றால் வாலிபர்கள் அதிகளவில் வாங்குவார்கள் என நினைத்து அதனை விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.

இதற்காக கஞ்சாவை தேனியை சேர்ந்த முருகன் என்பவரிடம் இருந்து வாங்கி அதனை பொடியாக்கி பீடாவுடன் கலந்து விற்றுள்ளார். போதை மாத்திரை மற்றும் கஞ்சா கலந்த ஒரு பீடாவை ரூ.1000 த்திற்கு விற்பனை செய்துள்ளார்.குறிப்பாக இளைஞர்கள் மற்றும் வடமாநிலத்தவர்களை குறி வைத்தே தனது பீடா விற்பனையை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் முருகனை பிடிக்க நினைத்த போலீசார், நேமராமை அவரது கடைக்கு அழைத்து சென்றனர்.

அங்கிருந்து நேமராமை, முருகனை செல்போனில் தொடர்பு கொண்டு, கஞ்சா தீர்ந்து விட்டதாகவும் கஞ்சாவை எடுத்து கொண்டு கோவைக்கு வாருங்கள் என செல்போனில் தகவல் தெரிவிக்க வைத்தனர்.

இதனை நம்பி முருகனும் கஞ்சாவை எடுத்து கொண்டு ராஜவீதியில் உள்ள கடைக்கு வந்தார். பின்னர் தான் கொண்டு வந்த கஞ்சாவை நேமராமிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் 2 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News