செய்திகள்
கா.செல்லப்பன்

முனைவர் கா.செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு -மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2021-09-18 16:42 GMT   |   Update On 2021-09-18 16:42 GMT
காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற கா.செல்லப்பன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
சென்னை:

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, முனைவர் கா.செல்லப்பனுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை மொழிபெயர்த்தமைக்காக செல்லப்பனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கா.செல்லப்பன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1936 ஆம் ஆண்டு பிறந்த செல்லப்பன், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள, கா.செல்லப்பனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலங்கெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி - அரும்பணி!

அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன்;

உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன்;  கவிஞர் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் - பாராட்டுகள்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Tags:    

Similar News