செய்திகள்
கோப்புபடம்

46 நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா: கோவையில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

Published On 2021-09-16 09:21 GMT   |   Update On 2021-09-16 09:21 GMT
பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுத்த மாநகராட்சி சார்பில் அனைத்து கல்லூரி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கோவை:

கோவை சரவணம்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு படிக்கும் நர்சிங் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 46 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அந்த கல்லூரியை மூடினர். உடனடியாக கல்லூரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

ஒரே கல்லூரியில் 46 பேருக்கு எப்படி கொரோனா பரவியது என மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கல்லூரி நிர்வாகம் கேரளாவில் இருந்து வந்த மாணவிகளை ஒருவாரம் தனிமைப்படுத்தாமல் மற்ற மாணவர்களுடன் ஒரே வகுப்பறையில் அமர வைத்ததும், அதன் மூலம் மற்ற மாணவிகளுக்கு கொரோனா பரவியது கண்டுபிடித்தனர். இதையடுத்து விளக்கம் கேட்டு அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு படிக்க வரும் மாணவ, மாணவிகள் அனைவரும் கட்டாயம் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும் மாநகராட்சி சார்பில் அனைத்து கல்லூரி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள், மளிகை கடைகள் வழக்கம் போல் இயங்கலாம். டிபார்ட்மென்டல் ஸ்டோர், சூப்பர் மார்க்கெட், மற்ற கடைகள், சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் இயங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை (17-ந் தேதி) முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News