செய்திகள்
அரசு பேருந்துகள்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை- சென்னையில் இருந்து 1000 சிறப்பு பஸ்கள்

Published On 2021-09-07 05:34 GMT   |   Update On 2021-09-07 06:44 GMT
பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

விநாயகர் சதுர்த்தி வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வருவதால் அதை தொடர்ந்து  சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை வருகிறது. வருகிற வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை முகூர்த்த நாளாகவும் இருக்கிறது.

அதனால் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவு நடைபெறுகிறது. இதன் காரணமாக பொது மக்கள் வெளியூர் பயணம்  மேற்கொள்ள இருக்கிறார்கள். மேலும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

இதனால் வியாழக்கிழமை மாலை முதல் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:-


விநாயகர் சதுர்த்தியோடு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவார்கள். எனவே பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

அதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,250 பஸ்களோடு விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,000 சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்க முடிவு செய்துள்ளோம்.

இன்று கூடுதலாக 100 பஸ்களும், நாளை (8-ந்தேதி) 300 பஸ்களும், 9-ந்தேதி 600 பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகளின் தேவையை பொறுத்து கூடுதலாக பஸ்களை இயக்கவும் தயாராக இருக்கிறோம்.

அதேபோல விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வர வசதியாகவும் போதிய அளவில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News