செய்திகள்
கைது

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக மோசடி- மேலும் 2 பேர் கைது

Published On 2021-08-11 10:15 GMT   |   Update On 2021-08-11 10:15 GMT
ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக 40 பேரிடம் ரூ.2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள பொம்மராஜு பேட்டை ஓடை தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 29). இவர் தனது நண்பர்கள் கண்ணபிரான், முருகன், சீனிவாசன், பாலாஜி ஆகியோருடன் ரெயில்வே துறையில் வேலை பெறுவதற்காக முயன்று கொண்டிருந்தனர்.

இதை அறிந்த ஆந்திர மாநிலம் சித்தூர், நகரி, மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்த நாகரத்தினம் என்கி்ற வெங்கடேசன் (53), ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கர் நகர் லாசர் தெருவை சேர்ந்த பாலாஜி (27), புஷ்பராஜ், அரவிந்த், ராகுல் ஆகியோர் தங்களுக்கு ரெயில்வே துறையில் பல உயர் அதிகாரிகளை தெரியும். அவர்கள் மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளனர்.

அதற்காக தலா ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதை தொடர்ந்து மேற்கண்ட 5 பேரும் அவர்கள் தெரிவித்தது போல் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரத்தை கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட மேற்கண்ட 5 பேரும் ரெயில்வே துறையில் வேலை பெறுவதற்கான போலியான பணி நியமன ஆணையையும், அதற்கான அடையாள அட்டைகளையும் வழங்கினார்கள். அதை பெற்றுக்கொண்ட சத்யராஜ் தனது நண்பர்களுடன் சென்று விசாரித்தபோது அவை போலியானது என்பது தெரியவந்தது. ஒரு கட்டத்தில் பணத்தை பெற்றுக்கொண்ட மேற்கண்ட 5 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதே போல அவர்கள் 40 பேரிடம் ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண் குமாரிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் லில்லி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியகுமார், வாசுதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் அருகே பதுங்கி இருந்த வெங்கடேசன், பாலாஜி ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அரவிந்த், ராகுல் ஆகியோரை போலீசார் கடந்த 3-ந் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News