செய்திகள்
கோப்புபடம்

பீளமேட்டில் மருத்துவ கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை-வெள்ளி கொள்ளை

Published On 2021-08-11 09:39 GMT   |   Update On 2021-08-11 09:39 GMT
பீளமேட்டில் தொடரும் சம்பவமாக மருத்துவ கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து தக்க நகை, வெள்ளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

பீளமேடு:

கோவை பீளமேடு சேரன்மாநகர் குமுதம் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). இவர் அரசு மருத்துவ கல்லூரியில் சீனியர் உதவி பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் இங்கு குடி வந்து 4 மாதங்கள் தான் ஆகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது மகளின் கல்லூரி சேர்க்கை சம்பந்தமாக அகமதாபாத் சென்றார். பின்னர் அங்கு வேலைகளை முடித்து விட்டு நேற்று வீட்டிற்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 14 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்களை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பேராசிரியர் செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவை கொடீசியா ரோடு குருசாமி நகரை சேர்ந்தவர் செல்வின். இவரது மகள் தீபிகா (21). இவர் இன்று காலை அதே பகுதியில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு மோட்டர் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென தீபிகாவின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க நகையை பறித்தனர்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்தும் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகிறனர்.

பீளமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் 5 கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கொள்ளையர்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு வீட்டின் பூட்டை உடைத்தும், வழிப்பறியிலும் ஈடுபடும் மர்ம நபர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News