செய்திகள்
கோவிலின் அருகே உண்டியல் உடைக்கப்பட்டு கிடக்கும் காட்சி.

விழுப்புரம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2021-08-07 04:50 GMT   |   Update On 2021-08-07 04:50 GMT
விழுப்புரம் அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டமங்கலம்:

விழுப்புரம் அருகே கண்டமங்கலம் போலீஸ் சரகம் குறான் பாளையம் கிராமம் ஏரிக்கரையில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு வழக்கம் போல் பூஜைகள் முடிந்த பின்னர் கோவில் கதவுகளை பூட்டி விட்டு பூசாரி வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அந்த கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்தனர்.

இதைதொடர்ந்து கோவில் வளாகத்தில் இருந்த 2 அடி உயர உண்டியலை பெயர்த்தெடுத்து அங்கிருந்து அலக்காக தூக்கி சென்றனர். பின்னர் அந்த உண்டியலை கோவிலுக்கு அருகே உள்ள ஒரு இடத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு வைத்து அந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்தனர். பின்னர் அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை செல்லியம்மன் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக இது குறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கண்டமங்கலம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்குள் புகுந்து நகை மற்றும் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News