செய்திகள்
சர்க்கரை ஆலையில் விவசாயிகள் கையில் கரும்புகளுடன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரும்பு நிலுவைத்தொகை ரூ.18 கோடி வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-07-29 08:50 GMT   |   Update On 2021-07-29 08:50 GMT
தஞ்சை அருகே குருங்குளத்தில் கரும்பு நிலுவைத்தொகை ரூ.18 கோடி வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வல்லம்:

தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. ஆலையை சுற்றியுள்ள விவசாயிகள் கரும்பு பயிருட்டு சர்க்கரை ஆலைக்கு வழங்கி வருகின்றனர்.

பல வருட போராட்டத்துக்குப்பின் கடந்த ஆண்டு நிலுவைத்தொகை ரூ.30 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதமாக குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகள் கரும்புகள் வழங்கி வந்த நிலையில் ரூ.18 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கடந்த சில மாதமாக ஆலை நிர்வாகத்திடம் கேட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை கரும்பு நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையை கையில் கரும்புகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கடந்த 6 மாத காலத்துக்கான கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ.18 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு வழக்கம்போல் ரூ.2500 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே வரும்காலங்களில் ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட வேண்டும்.

தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் பயிரிட்டு வந்த நிலையில் தற்போது 1½ லட்சம் ஏக்கராக சுருங்கி விட்டது. எனவே சர்க்கரை ஆலை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் நீர் ஆதாரத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News