செய்திகள்
சங்கரன்கோவிலில் நகை கடை அடைக்கப்பட்டுள்ள காட்சி.

சங்கரன்கோவிலில் நகைக்கடைகள், பட்டறைகளை அடைத்து போராட்டம்

Published On 2021-07-27 05:24 GMT   |   Update On 2021-07-27 05:24 GMT
மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து இன்று சங்கரன்கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளும், 200-க்கும் அதிகமான நகை பட்டறைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
சங்கரன்கோவில்:

மத்திய அரசு மக்களுக்கு தரமான தங்க நகைகள் கிடைக்கும் பொருட்டு மக்கள் வாங்கும் தங்க நகைகளின் தரத்தினை உறுதி செய்யும் நோக்கில் கடந்த மாதம் 15-ந்தேதி முதல் கட்டாய ஹால்மார்க் சட்டத்தை அமல்படுத்தியது.

இந்த சட்டத்தின்படி 2 கிராமுக்கு அதிகம் எடையுள்ள எல்லா நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை பெற்ற பின் ஹால்மார்க் உரிமம் பெற்றவர்கள் மூலமே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பிஐஎஸ் கட்டாய ஹால்மார்க் திட்டத்தை நகை வியாபாரிகள் வரவேற்றுள்ள நிலையில் நகைகளுக்கு முத்திரைபெறும் முறையில் பி.ஐ.எஸ்.-60 என்ற முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இது நடைமுறைக்கு குழப்பம் விளைவிக்கும் குறைபாடுகள் கொண்ட தொழில்நுட்பமான எச்.யூ.ஐ.டி. செயல்பாட்டை கொண்டு உள்ளதாக நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்த நடைமுறையால் சிறு நகை வியாபாரிகள் வியாபாரம் செய்வது மிகுந்த சிரமமாகும் என அவர்கள் கருதுகின்றனர். எனவே இந்த புதிய எச்.யூ.ஐ.டி. நடைமுறையை மத்திய அரசு விலக்கக் கோரி சங்கரன்கோவில் நகர நகை வியாபாரிகள் சங்கம் மற்றும் நகர பொற்கொல்லர் சங்கம் இணைந்து கவன ஈர்ப்பு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இன்று சங்கரன்கோவில் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளும், 200-க்கும் அதிகமான நகை பட்டறைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News