செய்திகள்
திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

ஏலச்சீட்டு நடத்தியவர் மரணம் - ரூ.1¼ கோடியை திருப்பி தராமல் மனைவி, அண்ணன் மோசடி

Published On 2021-07-25 15:29 GMT   |   Update On 2021-07-25 15:29 GMT
ஏலச்சீட்டு நடத்தியவர் மரணமடைந்தயையொட்டி தொகைக்கு பொறுப்பேற்ற மனைவி, அண்ணன் ரூ.1¼ கோடி மோசடி செய்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சி:

திருச்சி மலைக்கோட்டை, ஜான்தோப்பு, சின்ன கடைவீதி, விசுவாஸ்நகர், சஞ்சீவி நகர், இ.பி.ரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று திரண்டு வந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருச்சி சின்னக்கடை வீதியில் நிறுவனம் நடத்தி வந்த ஒருவரிடம், நாங்கள் 25-க்கும் மேற்பட்டோர் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் ரூ.5 லட்சம் என மாத ஏலச்சீட்டுபோட்டிருந்தோம். மேலும் கடனாகவும் பணம் கொடுத்திருந்தோம்.

இந்த நிலையில் ஏலச்சீட்டு நடத்தி வந்தவர் கடந்த ஆண்டு (2020) ஆகஸ்டு மாதம் இறந்து விட்டார். அதன்பின்னர், நாங்கள் அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தாரிடம் ஏலச்சீட்டு பணத்தை கேட்டோம்.

அப்போது வீட்டில் இருந்த இறந்து போனவரின் மனைவி, அண்ணன் மற்றும் தாயார் என மூவரும் சேர்ந்து எங்களுக்கு சேரவேண்டிய ரூ.1 கோடியே 27 லட்சத்து 78 ஆயிரத்து 500-க்கு பொறுப்பேற்றுக்கொண்டு 6 மாதகாலத்தில் திரும்ப கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

6 மாதங்கள் கடந்து ஏலச்சீட்டு பணம் மற்றும் கடனாக பெற்றத்தொகையை திரும்ப கேட்க சென்றோம். ஆனால் அவர்கள் திருப்பி தரவில்லை. மாறாக, பணத்தை திரும்ப தரமுடியாது என்றும், உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என அவதூறான வார்த்தைகளால் பேசி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் 3 பேரும் மிரட்டல் விடுத்தனர்.

எனவே, எங்களை ஏமாற்றும் நோக்கத்துடன் மோசடி செய்த ஏலச்சீட்டு தொகை ரூ.85 லட்சத்து 58 ஆயிரத்து 500-ம், கடனாக பெற்ற தொகை ரூ.42 லட்சத்து 20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 27 லட்சத்து 78 ஆயிரத்து 500-ஐ திரும்ப பெற்றுத்தர வேண்டும். மேலும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News