செய்திகள்
சென்னை ஐகோர்ட்

மருத்துவப் படிப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு- மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Published On 2021-07-19 15:38 GMT   |   Update On 2021-07-19 15:38 GMT
மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும், எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும் கூறினர்.
சென்னை:

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இட ஒதுக்கீடு குறித்து குழு அமைக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பரிந்துரை அளித்தது. இதையடுத்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்து இருந்தது. ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படாமல் இருந்தது.

அதைத் தொடர்ந்து, உத்தரவை அமல்படுத்தவில்லை என திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார். மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இடஒதுக்கீடு வழங்க தயாராக இருப்பதாகவும், எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும் கூறினர்.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இது குறித்த நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News