செய்திகள்
கோப்புபடம்.

கட்டண உயர்வு ஒப்பந்தம்-பவர்டேபிள் சங்கம் முடிவு

Published On 2021-07-14 10:39 GMT   |   Update On 2021-07-14 10:39 GMT
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தயாரித்த ஆடைகளை உற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்கான ஆட்டோ கட்டணம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
 
பவர்டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாக குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது. சங்க தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் சுந்தரம், துணை தலைவர் பொன்சங்கர் முன்னிலை வகித்தனர்.

தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பவர்டேபிள் கட்டண உயர்வுக்கு இடைக்கால ஒப்பந்தம் மேற்கொள்ள, ‘சைமா’வை வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து செயலாளர் நந்தகோபால் கூறியதாவது:-
ஆடை தைப்பதற்கான ‘கோன்’ விலை  ரூ.5 முதல்  ரூ.10 வரை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தயாரித்த ஆடைகளை  உற்பத்தி நிறுவனங்களுக்கு கொண்டுசென்று சேர்ப்பதற்கான ஆட்டோ கட்டணம் அதிகரித்துள்ளது.

பனியன் தொழிலாளர் சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகாத போதும் கூட பவர்டேபிள் நிறுவனங்கள் டெய்லர்களுக்கு சம்பள உயர்வு வழங்கி வருகின்றன.

இவையெல்லாம் பவர்டேபிள் நிறுவனங்களின் செலவினத்தை பலமடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. சைமா-பவர்டேபிள் சங்கம் இடையில் போடப்பட்ட கட்டண உயர்வு ஒப்பந்த காலம் முடிந்து 8 மாதமாகிறது. 

இனியும் தாமதித்தால் பவர்டேபிள் நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. இன்னல்களை உணர்ந்து சில ஆடை உற்பத்தி நிறுவனங்கள்  தானாக முன்வந்து பவர்டேபிள் கட்டணத்தை உயர்த்தி தருகின்றன.

பெரும்பாலான நிறுவனங்கள் கட்டண உயர்வு தர மறுக்கின்றன.
உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகிறது.

4 ஆண்டுகளுக்கு இல்லையென்றாலும் முதலில் குறுகிய காலத்துக்கான இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தி கட்டண உயர்வு வழங்கினால் போதுமானது. இது குறித்து ‘சைமா’ வுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.
Tags:    

Similar News