செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகளை தேடி மண் பரிசோதனை

Published On 2021-07-10 09:04 GMT   |   Update On 2021-07-10 09:04 GMT
மண் பரிசோதனை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் முக்கியமானதாகும்.
உடுமலை:

மண்ணில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. மேலும் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பது குறித்து தெரிந்துகொள்ளாமல் பல விவசாயிகள் அதிகப்படியான உரங்களை பயிருக்கு இடுகின்றனர்.

இதனால் அதிகப்படியான செலவு தான் ஆகுமே தவிர அதிகப்படியாக இடப்படும் உரத்தால் பயிருக்கு எந்த பலனும் இல்லை. எனவே மண் பரிசோதனை செய்வதன் மூலம் விவசாயிகள் தேவையான உரங்களை பயிருக்கு இடலாம்.

உடுமலை பகுதியில் மண் பரிசோதனை நிலையங்கள் எதுவும் இல்லாத நிலையில் விவசாயிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் நடமாடும் மண் பரிசோதனை மையம் வரவழைக்கப்பட்டு மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கூறியதாவது:-

மண் பரிசோதனை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் முக்கியமானதாகும். பாசன நீரை ஆய்வு செய்து உவர் நிலை, களர் நிலை, ரசாயன தன்மை, நீரில் கரைந்துள்ள தாதுக்கள் மற்றும் உப்புக்கள் ஆகிய விபரங்களை கண்டறிந்து பாசன நீரின் தன்மைக்கேற்ற பயிர்களைத் தேர்வு செய்ய முடியும். 

அந்தவகையில் ஆண்டியக்கவுண்டனூர், குட்டிய கவுண்டனூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மண் மற்றும் பாசன நீர் மாதிரிகள் அந்த பகுதிக்கே சென்று பரிசோதிக்கப்பட்டது.  உடனடியாக ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டதுடன் மண் மற்றும் நீரின் தன்மைக்கேற்ப இட வேண்டிய உரங்கள் மற்றும் அவற்றின் அளவுகள் குறித்த பரிந்துரைகளும் வழங்கப்பட்டது.

இதற்கென மண் பரிசோதனைக்கு ஒரு மாதிரிக்கு ரூ.20 கட்டணமும், பாசன நீர் பரிசோதனைக்கு ரூ.20 கட்டணமும் பெறப்படுகிறது. இதுபோல மற்ற பகுதியை சேர்ந்த விவசாயிகளும் பயன்பெற வேளாண் துறையினரிடம் தெரிவிக்கலாம்.

ஒரு பகுதியில் குறைந்தபட்சம் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய முன்வந்தால் அந்த பகுதிக்கே நடமாடும் வாகனம் கொண்டு செல்லப்பட்டு மண் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி பலனடையலாம் என்றனர்.
Tags:    

Similar News