செய்திகள்
சிறுமி திருமணம்

சென்னையில் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு

Published On 2021-07-08 04:44 GMT   |   Update On 2021-07-08 04:44 GMT
குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னையில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னையில் சமீப காலமாக குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

குடிசை பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களது பெண் குழந்தைகள் திருமண வயதை எட்டும் முன்னரே திருமணத்திற்கு ஏற்பாடு செய்வது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கடந்த மாதம் மட்டும் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திரு.வி.க. நகரில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதை போலீசார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காசிமேடு பகுதியில் கோவிலில் வைத்து இதே போன்று சிறுமி ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது. அதையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். 20 வயது இளைஞர் கைதானார்.

இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும் போது, “சென்னையில் குடிசை பகுதிகளிலேயே இது போன்று திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூடங்கள் இப்போது மூடப்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் சிறுமிகள் வீட்டிலேயே இருந்து வருகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் வறுமை காரணமாக வசதியான மாப்பிள்ளை வரும்போது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுக்கிறார்கள்” என்று ஆதங்கம் தெரிவித்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சென்னையில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணங்கள் ஆகியவற்றை பற்றி 1098 என்ற எண்ணில் புகாரும் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News